மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) கட்சியானது அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளது.
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு அனர்த்தத்திற்கு அரசாங்கமே முழுமையாக பொறுப்புக் கூறவேண்டும் எனத் தெரிவித்து, குற்றவியல் சட்டம் 298ன் அடிப்படையில் அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளது.
வழக்குத் தொடர்வது குறித்து சட்டத்தரணிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக மேல் மாகாணசபை உறுப்பினர் சுனில் வடகல மேலும் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லவில் அமைந்துள்ள கட்சியின் தலைமையக் காரியாலகத்தில் நேற்று(20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் இது குறித்து தெரிவிக்கையில்;
கொலன்னாவ – மீதொட்டமுல்ல அனர்த்தம் ஒர் இயற்கை அனர்த்தமல்ல அது ஓர் கொலையாகும்.
மாநகரசபை கட்டளைச் சட்டத்தின் 129ம் சரத்தின் பிரகாரம் நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் குப்பைகளை சேகரிப்பது மாநகரசபையின் கடமையாகும்.
நகர சபை நிர்வாகத்தின் கவனக் குறைவினாலேயே இவ்வாறு அனர்த்தம் நேர்ந்துள்ளது. எனவே அரசாங்கத்தின் எதிராக குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.
குப்பை மேட்டின் அபாயம் குறித்தும் அது சரிந்து விழவுள்ளதாகவும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அதனை நகரசபை நிர்வாகமும் அரசியல்வாதிகளும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் உதாசீனம் செய்துள்ளதாக சுனில் வட்டகல மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.