பனாமா கேட் ஊழல் தொடர்பில் நவாஸ் ஷெரீப் மீது கூட்டுக்குழு விசாரணை..

‘பனாமா கேட்’ ஊழல் தொடர்பாக நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்கள் வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் பல்வேறு நாடுகளில் ரகசியமாக முதலீடு செய்திருப்பதாகவும், வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள தகவல்கள், உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அந்த வகையில் பனாமாவின் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் சுமார் 1 கோடியே 15 லட்சம் ரகசிய ஆவணங்கள், உலக நாடுகளை சேர்ந்த தனி நபர்கள், நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி கம்பெனிகள் துவங்கவும், ரகசிய வங்கி கணக்குகள் தொடங்கவும் உதவி இருப்பதை அம்பலப்படுத்தின. இந்த ஊழல் ‘பனாமா கேட் ஊழல்’ என அழைக்கப்படுகிறது.

இந்த ஊழலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பலன் அடைந்திருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. இதில் அவரது பதவியைப் பறிக்க வேண்டும் என்று அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் உள்ளிட்ட 4 பேர் வழக்கு தொடுத்தனர்.

குறித்த வழக்கின் விசாரணையின் தீர்ப்பு நேற்று(20) வெளியானது. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் நீதிபதிகள் ஆசிப் சயீத் கோசா, குல்சார் அகமது ஆகிய இருவரும் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக தீர்ப்பு அளித்தனர்.

ஆனால் இஜாஸ் அப்சல்கான், அஜ்மத் சயீத், இஜாஜூல் அசன் ஆகிய 3 நீதிபதிகளும், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஜே.ஐ.டி. என்னும் கூட்டுப்புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

3 நீதிபதிகள் தீர்ப்பு மெஜாரிட்டி தீர்ப்பு என்ற வகையில், ஏற்கப்படுகிறது. எனவே நவாஸ் ஷெரீப் பதவிக்கு ஆபத்து இல்லை. அவர் பதவியில் தொடரலாம். அவரும், அவரது குடும்பத்தினரும் குற்றவாளிகள் என தீர்க்கப்படவில்லை. அவர்கள் மீது விசாரணை மட்டுமே நடைபெறும்.

இந்த தீர்ப்பையொட்டி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தீர்ப்பை அறிவதற்காக பல அரசியல் தலைவர்கள் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.