மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் வெடிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக அங்கு ஆய்வு செய்த ஜப்பானிய நிபுணர் குழு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக அங்கே இருப்பவர்களும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் மற்றும், மீட்புக் குழுவினர் அவதானமாகச் செயற்படுமாறும் குறித்த குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 14ம் திகதி மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில், 32 பேர் வரை உயிரிழந்தனர், இந்நிலையில் குறித்த குப்பை மேடு தொடர்பில் ஆராய்வதற்காக ஜப்பானிலிருந்து 13பேர் அடங்கிய குழுவினர் வருகை தந்திருந்தனர்.
குறித்த பிரதேசத்தினை பார்வையிட்ட குறித்த குழுவினர் தெரிவிக்கையில்;
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு இடம்பெற்ற பகுதிகளில் மீத்தேன் (விஷவாயு) வாயுவின் தாக்கம் அதிகம் காணப்படுகின்றது. இந்த விஷவாயுத் தாக்கத்தினால் எந்நேரத்திலும் வெடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
எனவே, அப்பகுதியில் இருப்பவர்கள் மிகவும் அவதானமாகச் செயற்படுங்கள். குறிப்பாக சிறிய அளவில் நெருப்பு பற்றக் கூடிய நிலையில் எந்தவொரு பொருளையும் அந்தப் பகுதியில் பாவிப்பது ஆபத்தான விடயம் என்றும் அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சராசரியாக மீத்தேன் வாயுவின் அளவு 1.5 ஆக இருக்க வேண்டும். ஆனால் மீதொட்டமுல்லயில் அதிகளவில் மீத்தேனின் செறிவு காணப்படுகிறது. அந்தப் பகுதியில் மக்கள் பயன்படுத்திய மலசல கூடங்களில் இருந்து வெளியேறிய கழிவுகளும் இணைந்து அந்தப் பகுதியில் மீத்தேனின் செறிவு அதிகரிக்க காரணமாக இருக்கலாம்.
எனவே மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். இந்தப் பகுதியில் இப்பொழுது செறிவான மீத்தேன் அதாவது விஷவாயு இருப்பதன் விளைவாக, எந்நேரத்திலும் வெடிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.
எனவே அந்தப் பகுதியில் நடமாடும் அனைவரும் அவதானமாகச் செயற்படவேண்டும். மேலும் ஆய்வுப் பணிகளை தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.