பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை

இலங்கை – பாகிஸ்தான் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது. நாணயச்சுழட்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை கைப்பற்றியது.

மிஸ்பா உல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் கொண்ட போட்டித் தொடரில் பங்கேற்றுள்ளது. காலியில் நடந்த முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. கட்டாயம் வென்றாக வேண்டிய இக்கட்டான நிலைக்கு இலங்கை அணி தள்ளப்பட்டுள்ளன. பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர் தமிகா பிரசாத்துக்கு வலது கையின் பெரு விரலில் காயம் ஏற்பட்டதால் இந்த டெஸ்டில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. மேலும், சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேராவும் காயத்தால் அவதிப்படுகிறார். இதனால் அந்த அணியில் சில மாற்றங்கள் இருக்கும்.

இலங்கை கெப்டன் மேத்யூஸ் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறுகையில்; ‘‘முந்தைய ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்போம். சில பகுதிகளில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. குறிப்பாக ஷாட்டுகளை தேர்வு செய்து அடிப்பதில் கவனமுடன் செயல்பட வேண்டும். அது பற்றி விவாதித்து இருக்கிறோம்’ என்றார்.

மேலும் மேத்யூஸ், ‘சங்கக்கரா தனது எதிர்காலம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. டெஸ்டில் இருந்து எப்போது ஓய்வு பெறுவது என்பது குறித்து தேர்வாளர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.’ என்றும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அந்த அணியின் மூத்த ஆட்டக்காரர் 37 வயதான யூனிஸ்கானுக்கு இது சிறப்பு வாய்ந்த டெஸ்டாகும். ஏனெனில் இது அவர் களம் காணும் 100-வது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டும் 5-வது பாகிஸ்தான் வீரர் என்ற சிறப்பை அவர் பெறப்போகிறார்.

முதலாவது டெஸ்டில் யாசிர் ஷா சுழலில் மிரட்டினார். 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். இந்த டெஸ்டிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறார்.

இந்த ஆடுகளத்தில் ‘பவுன்ஸ்’ கொஞ்சம் கூடுதலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உகந்த மைதானங்களில் ஒன்றாக வர்ணிக்கப்படும் இங்கு கடைசியாக நடந்த 8 டெஸ்டுகளிலும் முடிவு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை அணி தீவிரம் காட்டும் என்பதால் இந்த டெஸ்டில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை டென் கிரிக்கெட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. போட்டி நடக்கும் 5 நாட்களும் மழையின் குறுக்கீடு இருக்கக்கூடும். அங்கு இன்று மழை பெய்வதற்கு 40 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.