ஞானசார தேரரை கைது செய்ய முஸ்லிம் அமைச்சர்கள் பொலிஸ்மா அதிபரிடம் மகஜர்..

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யாவிடின் நாட்டின் அமைதி சீர்குலைய வாய்ப்புண்டு என தெரிவித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்து உள்ளனர்.

பொலிஸ் மா அதிபரை இன்று(18) மாலை நேரடியாக சந்தித்து குறித்த இந்த மகஜரை கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரை அமைச்சர் றிஷாட் பதியுதீன், பைசர் முஸ்தபா, நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் கூட்டாக இணைந்து பொலிஸ் தலைமையகத்தில் கையளித்துள்ளனர்.

ஞானசார தேரர் முஸ்லிம்கள் மீதும் அல்லாஹ்வின் மீதும் தொடர்ச்சியாக கக்கிவரும் விஷக்கருத்துக்கள் அடங்கிய ஆவணங்களை பொலிஸ் தலைமையகத்தில் சமர்ப்பித்துள்ளதுடன், உடன் நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஞானசாரரின் நடவடிக்கை தொடர்பில் முஸ்லிம் மக்கள் விசனமடைந்துள்ளதாகவும், நல்லாட்சி அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்து வருவதாகவும் குறித்த முஸ்லிம் தலைவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)