பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவிரவாதிகளை குறிவைத்து இராணுவம் நடத்திய வான்வெளி ஒத்திகை தாக்குதலில் குறி தவறியதால் சொந்த படை வீரர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் மாராவி தீவு பகுதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி கடந்த 8 நாட்களாக பொதுமக்கள் பலரை மனித கேடயங்களாக பிடித்து வைத்துள்ளனர். இவர்களை ஒடுக்குவதற்காக பிலிப்பைன்ஸ் இராணுவம் கடும் முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு இராணுவ நடவடிக்ககளுக்கான ஒத்திகைகள் பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதேபோல் ஒரு ஒத்திகையில் இராணுவ ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட சிறிய ரக ஏவுகணைகள் துரதிர்ஷ்டவசமாக குறிதவறி சொந்த வீரர்களின் நிலைகளை தாக்கியது. இந்த தாக்குதலில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். 8 வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீரர்களிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததே இந்த மோசமான சம்பவத்திற்கு காரணம் என இராணுவ செயலாளர் டெல்பின் தெரிவித்துள்ளார். இந்த விபத்து சரியாக எந்த இடத்தில் நடந்தது என்பதையும் அவர் கூற மறுத்துவிட்டார்.