இறக்குமதி செய்யப்படும் அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையையும் உள்ளுர் அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையையும் ஒரே விதமாக பேணுவதன் மூலம் சந்தையில் ஏற்படும் மோசடிகளை தவிர்க்க முடியும் என கொழும்பு வர்த்தகர்கள் சங்கம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான இறக்குமதித் தீர்வையை சிறிதளவில் அதிகரித்து சந்தையில் விற்கப்படும் இறக்குமதி, உள்ளுர் அரிசியின் ஆகக்கூடிய சில்லறை விலையை சமப்படுத்தல், இறக்குமதி செய்யப்படும் ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பில் சர்வதேச சந்தையின் அவ்வப்போதைய நிலவரம், டொலர் பெறுமதியின் காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுத்தல், போன்ற காரணங்களால் சந்தையில் வழங்குனர்களையும், நுகர்வோர்களையும் பாதிக்காத தன்மையை ஏற்படுத்த முடியும் என அமைச்சரிடம் குறித்த வர்த்தகர் சங்கம சுட்டிக்காட்டியுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்;
“..நீங்கள் தெரிவித்த இந்த அனைத்து விடயங்களையும் எழுத்து மூலம் வர்த்தகர் சங்கத்தின் சிபாரிசுடன் கையளித்தால் மேன்மட்டத்திற்கு கொண்டு சென்று இது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கமுடியும்..” என தெரிவித்த அவர், இற்றைவரை காலமும் நுகர்வோரின் பாதுகாப்பு மற்றும் நன்மைகள் தொடர்பாகவே கூடிய கவனம் செலுத்தி வந்த நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடமும் என்னிடமும் முதன் முறையாக இவ்வாறான ஒரு பிரச்சினை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு நுகர்வோரும் வழங்குனர்களும் பாதிக்கப்படாத வகையில் உரிய தீர்வை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.