சைட்டம் நிறுவன பிரச்சினையால் வைத்திய பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதால், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாரிய பாதிப்பு ஏற்படும், என, ஒன்றிணைந்த வைத்திய பீட விரிவுரையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐந்து மாதங்களுக்கும் மேலாக வைத்திய பீட மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருவதாகவும், அச்சங்கத்தின் அமைப்பாளர் என்.சி.வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வைத்திய பீடத்தைச் சேர்ந்த 7000க்கும் அதிக மாணவர்கள் அரசாங்கத்தின் வைத்திய பீடத்தில் கல்வி கற்பதோடு, அவர்களுக்காக பாரிய நிதி செலவிடப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலைமை காரணமாக எதிர்வரும் வருடங்களில் வைத்திய பீடத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதில் பிரச்சினை ஏற்படலாம் என குறித்த சங்கம் தெரிவித்துள்ள நிலையில்; எதுஎவ்வாறு இருப்பினும், திட்டமிட்டபடி, மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
எந்தவொரு காரணத்திற்காகவும் புதிய அனுமதிகள் தாமதப்படுத்தப்படமாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த வருடம் முதல் வைத்திய பீடத்திற்காக நூறு மாணவர்கள் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.