ஞானசார தேரரின் இனங்களுக்கு இடையிலான ஆவேசமான நடைமுறையும், கருத்துத் தெரிவிக்கும் விதத்தையும் நாம் ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை. இருப்பினும், அவர் முன்வைக்கும் தர்க்கம் மறுக்க முடியாதது.
அவர் சொல்லும் கருத்துக்களின் உண்மைகளைத் தேடிப் பார்ப்பதற்குப் பகரமாக, நாட்டிலுள்ள சகல பிக்குகளையும் கௌரவக் குறைவாகவும், அவர்களது பெயர்களை முறையற்ற விதத்தில் பிரஸ்தாபித்தும் சிலர் நடவடிக்கை எடுப்பதை அங்கீகரிக்க முடியாது என அஸ்கிரிய மகா விகாரையின் போஷகர் வேதருவே ஸ்ரீ உபாலி நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது நிலவும் இனவாத சூழல் தொடர்பாக கண்டி அஸ்கிரிய மகா விகாரையின் சங்க செயற்குழு ஏகமனதான தீர்மானங்கள் பலவற்றை அறிக்கையாக அரசுக்கு முன்வைத்துள்ளது.
குறித்த இந்த அறிவிப்பு சகலருக்கும் பச்சை சமிக்ஞை எனவும், இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லையாயின் இது அரசாங்கத்துக்கான சிவப்பு சமிக்ஞையாக மாறும் எனவும் அஸ்கிரிய மகா விகாரையின் போஷகர் வேதருவே ஸ்ரீ உபாலி நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
குறித்த இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது;
“…அரசியல்வாதிகளும், சமூகவாதிகளும், இடது சாரிகளும் தம்மை பௌத்தர்கள் எனக் கூறிக் கொண்டு இவ்வாறான முறையில் பிக்குகளுக்கு எதிராக கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஊடக சந்திப்புக்கள், அறிவிப்புக்கள், கடிதங்கள் போன்றவற்றிலும் இவ்வாறு பிக்குகளின் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சிங்கள பௌத்த கலாசாரத்தின் படி மகாநாயக்க தேரர்களுக்கே அவ்வாறு பிக்குகளின் பெயர்களைப் பயன்படுத்த முடியும்..” எனவும் அவ்வறிக்கையின் முதலாவது சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு 8 சரத்துக்கள் அடங்கிய அறிக்கை அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் பௌத்தர்களுக்கும் மகா சங்கத்தினர் விடயத்திலும் அரசாங்கம் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன், இந்த நாட்டிலுள்ள மாற்று மதத்தினரால் பௌத்த சமூகத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)