உமா ஓய வேலைத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பண்டாரவளை நகரில் நேற்று(28) கடையடைப்பு மற்றும் போராட்டம் நடத்திய மக்களின் பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை(30) சந்திக்கவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டத்தின் கீழ், பண்டாரவளை நகருக்கு அடியில் நிர்மாணிக்கப்படும் நீண்ட சுரங்கம் காரணமாக, நகரத்தின் நிலம் தாழ்வடைவதுடன், நீர்வளமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வேலைத் திட்டத்துக்கு எதிராக நேற்று(28) காலை முதல் அங்கு கடையடைப்பு போராட்டம் இடம்பெற்று வந்ததுடன், புகையிரதத்தை மறித்தும் மக்கள் போராட்டம் மேற்கொண்டனர்.
இந்த விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர், ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.