கேள்விக்குறியாகியுள்ள அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களது நிலை..

ஊதியம் தொடர்பாக கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தம் முடிந்துள்ளதால் 200க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலியா வீரர்கள் வேலை இழந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சங்கம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த நவம்பரில் தொடங்கிய நிலையில், கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்த ஊதியம் மற்றும் போனஸ் தொகை தொடர்பான ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் நிராகரித்தனர்.

ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து கடைசி நாளும் எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதையடுத்து 200க்கும் மேற்பட்ட வீரர்கள் வேலை இழந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 12ஆம் திகதி தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரைப் புறக்கணிப்பது குறித்தும் வீரர்கள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினை முடியும் வரை வீரர்கள் கண்காட்சிப் போட்டிகளில் விளையாடவும் தடை விதித்து அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ஊதிய ஒப்பந்தம் குறித்து நிர்வாகம் உரிய முடிவெடுக்காவிட்டால் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் பங்கேற்க வீரர்களே இருக்க மாட்டார்கள் என சமீபத்தில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)