ஜனாதிபதி சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களங்களை கோருகிறார்..

மோசடிகளைப் பிடித்து குறித்த தண்டனைகளை பெற்றுக் கொடுக்க சட்டமா அதிபர் திணைக்களத்தையும் பொலிஸ் திணைக்களத்தையும் மூன்று மாதத்திற்கு தன்னிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.

நேற்று(04) ஜனாதிபதி செயலகத்தில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், ஊழல் குறித்த செயற்குழு செயலகத்தினை முன்னோக்கி நடாத்துவது குறித்து கலந்துரையாடுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மஹிந்த தரப்பு உட்பட சகல குற்றவாளிகளையும் சட்டத்திற்கு முன் நிறுத்த முடியுமாக இருந்த போதிலும், ஆட்சியிலுள்ள சிலர் ராஜபக்சர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பதால் கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்க முடியாமை குறித்து அதிருப்தி தெரிவித்த ஜனாதிபதி இவ்விடயம் குறித்து கடும்தொனியில் கருத்து தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களம், நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு, குற்றப்புலனாய்வுப்பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடியதில் குறித்த வழக்குகள் தாமதமாவதற்கு காரணமாக மேலிடத்திலிருந்து அழுத்தங்கள் வருகின்றதாக கூறியிருந்ததாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தார்.

பிரபல மோசடிகள் குறித்து சம்பந்தப்பட்ட பெயர்களை வரிசையாக கூறி அவர்கள் ஏன் இன்னும் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என அமைச்சரவைக் குழுவில் ஜனாதிபதி கேள்வியெழுப்பி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)