ஜனாதிபதியால் அனுப்பப்பட்ட அமைச்சர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட மாகாண சபை உறுப்பினர்

உமாஓயா திட்டம் ஏற்படுத்தியிருக்கும் பிரச்சினை பற்றி ஆராய்வதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீரவும், பிரதியமைச்சர் அநுராத ஜயரத்னவும் நேற்று பண்டாரவளைக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் பண்டாரவளை உடபேருவ பிரதேசத்திலுள்ள வீடொன்றை பரிசோதித்து கொண்டிருந்த போது அங்கு வந்த மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்யாரத்ன, அவர்களுடன் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் காரணமாக அமைச்சர்கள் இருவரும் அப்பகுதியிலிருந்து வெளியேறாது இருந்துள்ளனர்.

அதேவேளை, சம்பவ தினத்தன்று 2 மணியளவில் பண்டாரவளை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த கலந்துரையாடலுக்கு மாலை 3.45 வரை அமைச்சர்கள் வருகை தராததால் கலந்துரையாடலுக்காக வருகை தந்திருந்த பலர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

மேலும், உமாஓயா பிரச்சினையை தீர்த்து வைக்க ஜனாதிபதியால் அனுப்பப்பட்ட அமைச்சர்கள் கலந்துரையாடலை புறக்கணித்துள்ளதாக கலந்துரையாடலுக்கு வருகை தந்த பலர் விசனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.