இலங்கை தேயிலையின் அகவை 150…

இலங்கை தேயிலையின் 150வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நோர்வூட் தேயிலை தொழிற்சாலையில் நிகழ்வொன்று நேற்று(06) மாலை இடம்பெற்றது.

பொகவந்தலாவ பெருந்தோட்ட கம்பனியின் பிராந்திய பொறுப்பதிகாரி டொரோன் மஜித் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வினை தேயிலை அதிகாரசபை மற்றும் தோட்ட அதிகாரிகள் சங்கம் ஆகியன இணைந்து நடத்தியிருந்தன.

குறித்த நிகழ்வின் போது, பொறுப்பதிகாரி மஜித், ஜேம்ஸ் டெயிலரினால் 1867ம் ஆண்டு கலஹா, லூல்கந்துர பகுதியில் முதன் முதலாக தேயிலை பயிர் செய்கை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது என தெரிவித்தார்.

தற்போது 150 வருட வரலாற்றை எட்டி நிற்கின்றது. தேயிலை தொழில் துறையானது சுமார் 125 வருடகாலம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இறுதி 25 வருட காலப்பகுதி பல்வேறு சவால்களுக்கு மத்தியிலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும், பெருந்தோட்ட தொழிலாளர்களின் பங்களிப்புடன் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டு வந்த தேயிலை தொழில்துறையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும் என தான் நம்புவதாகவும், தொடர்ந்தும் தொழிலாளர்களின் பங்களிப்பை வழங்கி இன்னும் 150 வருடம் இலங்கை தேயிலை சாதனைகளை படைக்க வேண்டும் என தனது கருத்தினைத் தெரிவித்திருந்தார்.

 

(rizmira)