தனக்காகவோ அல்லது தனது பதவிக்காகவோ பணிப் பகிஷ்கரிப்புக்களை முன்னெடுக்க வேண்டாம் என பேராசிரியர் காலோ பொன்சேகா அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் இன்று(10) கோரியுள்ளார்.
இலங்கை வைத்திய சபையின் தலைவர் பதவியிலிருந்து கடந்த தினம் விலகிய பேராசிரியர் காலோ பொன்சேகாவினை சந்தித்து பதவியிலிருந்து விலக வேண்டாம் எனவும், பதவி விலகினால் பணிப் பகிஷ்கரிப்பினை மேற்கொள்ள தயாராக உள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் இன்று(10) பேராசிரியரின் நாவலைப் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து சந்தித்து குறிப்பொன்றினை கையளித்த போதே காலோ பொன்சேகா மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தாம் வைத்தியர்களது பணிப் புறக்கணிப்புக்கு விருப்பம் இல்லை என தெரிவித்த பொன்சேகா, 05 வருடங்கள் தான் வைத்திய சபையில் இருந்ததாகவும் மீண்டும் 6 மாத காலம் எனது பதவி நீடிக்கப்பட்டதாகவும் மேலும் குறித்த பதவியில் தான் இருக்க விரும்பவில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திடம் மேலும் அவர் தெரிவித்திருந்தார்.