வெலிக்கடை சிறைச்சாலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் 56 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் கலகம் இடம்பெற்றது.
குறித்த இந்த கலகத்தில் 27 கைதிகள் மற்றும் விளக்கமறியல் கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர். இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 56 பேருக்கு எதிராக இன்று(10) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் ஆர்.குருசிங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சிறைச்சாலை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை, தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுக்கள் 56 பேர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபரினால் இந்த குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்பய்பட்ட சந்தேக நபர்களுக்கு தலா 5000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா இரண்டு லட்சம் ரூபா சரீர பிணையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(rizmira)