ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஷ் இற்கு உத்தியோகபூர்வ விஜயத்தில்..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பங்களாதேஷுக்கு, இன்று(13) விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா அம்மையாரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அங்கு விஜயம் செய்வதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி, இந்த விஜயத்தின் போது பங்களாதேஷ் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன், பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர், சுகாதார அமைச்சர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையிலான இராஜதந்திரத் தொடர்புகள்,
1972ஆம் ஆண்டில் ஆரம்பமாகின.

இலங்கையில், பங்களாதேஷின் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பிலும், கடல்சார், கல்வி, சுற்றுலா, மீன்பிடி, சுகாதாரம் போன்ற துறைகளிலான தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

அத்துடன், இரு நாடுகளுக்குமிடையில் விவசாய, கல்வி, வெளிவிவகாரப் பயிற்சி, குடிவரவு மற்றும் குடியகல்வு போன்ற விடயங்களிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இந்த விஜயத்தின் போது கையெழுத்திடப்படவுள்ளன.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே 142 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகம் இடம்பெறுகிறது. அந்த வர்த்தகத்தை மேலும் அதிகரிப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும், ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது என்றும் குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)