கனடாவில் தனது 6 குழந்தைகளின் இறந்த உடல்களை லொக்கரில் மறைத்து வைத்திருந்த பெண்ணிற்கு 8.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் வின்னிபெக் பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரியா கீஸ்பிரேசட் என்பவர் மீது 2014ம் ஆண்டு தனது ஆறு குழந்தைகளின் இறந்த உடல்களை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்ததாக வழக்கு தொடரப்பட்டது.
ஆண்ட்ரியா தனது இந்த குழந்தைகளின் உடல்களை யு-ஹால் என்ற நிறுவனத்தில் உள்ள தனது லொக்கரில் மறைத்து வைத்திருந்திருக்கிறார்.
அவர் அந்த நிறுவனத்திற்கு பணம் செலுத்தாததால் அவரது லொக்கரை அந்நிறுவனத்தின் பணிபுரிபவர் திறந்து பார்த்த போது அதில் 6 குழந்தைகளின் அழுகிய உடல்கள் இருந்துள்ளது.
இதனையடுத்து அந்த நிறுவனத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் ஆண்ட்ரியா வீட்டில் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து ஆண்ட்ரியா மீது ஆறு பிரிவுகளில் பொலிசார் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து பல காரணங்களால் வழக்கு விசாரணை தாமதமான நிலையில் கடந்த 2016ம் ஆண்டு முதன்முறையாக நீதிமன்றத்தில் விசாரணை துவங்கப்பட்டது.
இதில் குற்றம்சாட்டப்பட்ட ஆண்ட்ரியா 6 முறை கர்ப்பமானதாகவும், பல முறை சட்டபூர்வமாக கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிய வந்தது.
இந்த நிலையில் நடத்தப்பட்ட டி.என்.ஏ சோதனை ஆண்ட்ரியாவுக்கு எதிராக அமைந்தது. அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆறு குழந்தைகளும் ஆண்ட்ரியாவின் சொந்த குழந்தைகளே என அதில் உறுதியானது.
வின்னிபெக் நகர நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆண்ட்ரியாவுக்கு 8.5 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கியுள்ளார்.
இது குறித்து நீதிபதி தாம்சன் கூறுகையில், அண்டிரியா தனக்கு குழந்தை பிறந்ததை பற்றி தனது கணவரிடம் இருந்து மறைத்துள்ளார். குழந்தைகள் உயிருடன் பிறந்துள்ளன.
குழந்தைகளுக்கு மருத்துவ சிகிக்சை கொடுக்காததால் இறந்திருக்கலாம். அதனால் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.