டொக்டர் நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலையின் அடகு உரிமைகள் இலங்கை வங்கியிடம் காணப்படும் என்பதுடன், எதிர்வரும் 10 வருட காலப்பகுதியினுள், சைட்டத்தால் சகல கடன்களும் செலுத்தித் தீர்க்கப்படும் வரை குறித்த இந்த உரிமை இருப்பதோடு, பின்னர் முழு உரிமையாண்மை உறுதிகளும் இலங்கை அரசுக்குச் சென்றடையும் என, சைட்டம் அறிவித்துள்ளது.
மேற்படி நடவடிக்கைகள், அமைச்சரவை அனுமதியுடனான அமைச்சரவைப் பத்திரத்துக்கு இணங்கவே முன்னெடுக்கப்பட்டது என்றும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த நிறுவனத்தால், நேற்று(20) அனுப்பப்பட்டிருந்த ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, “வெவ்வேறு தரப்பினரால் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்க, டொக்டர் நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலை (NFTH)3.55 பில்லியன் ரூபாய் பெறுமதிக்கு, இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த வைத்தியசாலை அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணி, சுகாதார அமைச்சுக்கு உப-குத்தகைக்கு வழங்கப்படும்.
இலங்கை வங்கி, அரசு மற்றும் சைட்டம் ஆகியவற்றின் சட்டத்தரணிகளின் வழிகாட்டலில் சகல பங்காளர்களின் நலனைக் கவனத்தில் கொண்டு, குறித்த இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேலும், இந்த உடன்படிக்கையின் பிரகாரம், சைட்டத்துக்கு நஷ்டஈடு அல்லது குத்தகை எதனையும் இலங்கை அரசு வழங்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலை, இலங்கை அரசாங்கத்திடம் ஜூலை 17ஆம் திகதி வைபவ ரீதியாக ஒப்படைக்கப்பட்டிருந்தது.
முத்தரப்பு உடன்படிக்கையில், சைட்டத்தின் தலைவர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர். இதன் மூலம், வைத்தியர் நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக இலங்கை அரசின் வைத்தியசாலையாக ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் இயங்க ஆரம்பிப்பதுடன், பொது மக்களுக்கு இலவச மருத்துவ பராமரிப்புச் சேவைகளையும் வழங்கும்.
சைட்டம் நிர்வாகம், இலங்கை அரசாங்கத்துடன் கைகோர்த்துச் செயலாற்ற எதிர்பார்ப்பதுடன், அதனூடாக இலங்கையின் சுகாதார பராமரிப்பு துறையை மேம்படுத்தி, சகல மக்களுக்கும் வினைத்திறன் வாய்ந்த மற்றும் தரமான சுகாதார சேவைகளை தகைமை வாய்ந்த மருத்துவ நிபுணர்களிடமிருந்து பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளது” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.