கம்போடியாவில், ஓராண்டுக்கு முன் இறந்த கணவர், பசுவின் கன்றுக்குட்டி வடிவில், மறு ஜென்மம் எடுத்திருப்பதாக கூறும், 74 வயது மூதாட்டி, அதை திருமணம் செய்வதாக அறிவித்து, தன் வீட்டில், கணவருக்கு நிகரான சகல உபசரிப்புகளை அளித்து, அதனுடன் வாழ்ந்து வருகிறார்.
தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவின், கிராடி மாகாணத்தைச் சேர்ந்த மூதாட்டி, கிம் ஹாங், 74. அவரின் கணவர் கடந்த ஆண்டு இறந்தார்.
அதன் பின், அப்பகுதியில் உள்ள ஒரு பசு, ஒரு ஆண் கன்றை ஈன்றது. அந்த கன்றின் செயல்பாடுகள் அனைத்தும், தன் கணவரின் செயல்பாடுகளை ஒத்திருப்பதாக, கிம் ஹாங் கருதினார்.
இது குறித்து, தன் மகன்களிடம் தெரிவித்தார், கிம் ஹாங். அவர்களும், இதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
கிம் ஹாங்கிடம் இயல்பாகவே பாசத்துடன் பழகி வரும் கன்று, அவரின் மகன்களிடமும் மிகவும் பாசமாக உள்ளது.
இதையடுத்து, கிராம மக்களை கூட்டி, அனைவர் முன்னிலையிலும், அந்த கன்றுக்குட்டியை திருமணம் செய்வதாக அறிவித்தார்.
அதன் பின், அதை வீட்டிற்கு அழைத்துச் சென்ற ஹாங், அதை தினமும் குளிப்பாட்டி, அதற்கு உணவளித்து, தன் கணவர் பயன்படுத்திய படுக்கையில் உறங்க வைக்கிறார்.
தான் உயிரோடு இருக்கும் வரை, அந்த கன்றுக்குட்டியை பராமரிக்கப் போவதாக தெரிவித்துள்ள ஹாங், தனக்குப் பின், தன் மகன்கள் அதை விற்கக் கூடாது எனவும் கட்டளையிட்டுள்ளார். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அந்த கன்றுக்குட்டி வளர்ந்து, இயற்கையான முறையில் மரணம் அடைந்த பின், அதற்கு உரிய முறையில் இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும் எனவும், ஹாங் கட்டளையிட்டுள்ளார்.