மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி, தன்னிடமுள்ள ஆதாரங்களையும் சமர்ப்பிக்க விரும்புவதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடியுடன் அஜித் நிவாட் கப்ராலுக்கும் தொடர்புண்டு என, கடந்த வெள்ளிக்கிழமை(04) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதனையடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால்; அதில் ஆணைக்குழுவில் முன்னிலையாகுவது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதோடு, ஆணைக்குழுவின் சகல கேள்விகளுக்கும் பதிலளிக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் அர்ஜூன் அலோசியஸின் பர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)