தாஜூடீன் கொலையின் கொலைதாரிகள் அனைவரையும் தராதரம் பார்க்காது கைது செய்ய நடவடிக்கை..

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜூடீன் கொலை சம்பந்தமாக விசாரணைகளை நடத்தி வரும் குற்றப் புலனாய்வு திணைக்களம், இதுவரை நடத்திய விசாரணைகளுக்கு அமைய கொலைக்கான திட்டம், குறித்த அந்த திட்டத்தை செய்து முடித்த நபர்கள், கொலையின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிந்துள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களம் கண்டறிந்த இரகசிய தகவல்கள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவித்து, நீதிமன்றத்தின் அனுமதியுடன் சந்தேக நபர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கொலை தொடர்பாக தாஜூடீனின் உறவினர்கள் சந்தேகிக்கும் நபர்கள், கொலை உறுதுணையாக இருந்தனர் என்று சந்தேகிக்கும் நபர்கள், குற்றம் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள் என சந்தேகிக்கும் நபர்கள், தாஜூடீனுக்கு நெருக்கமானவர்கள், அவருடன் நெருங்கி பழகியவர்கள் உட்பட பலரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், கொலையுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெளிவான முடிவுக்கு வந்துள்ளது.

இதற்கு அமைய நீண்ட காலம் செல்லும் முன்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள். பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் சில வருடங்களுக்கு முன்னர் நாராஹென்பிட்டி சாலிகா மைதானத்திற்கு அருகில் அவரது காருக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருந்தார்.

விபத்தில் அவர் கொல்லப்பட்டதாக அப்போது பொலிஸ் விசாரணைகளில் கூறப்பட்டது.

இதனையடுத்து புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நடத்திய விசாரணைகளில் தாஜூடீன் கொலை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகிறது.

 

(rizmira)