பிரதியமைச்சர் பதவியிலிருந்து விலக்கியமை குறித்து அருந்திக விசேட கருத்து..

மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலேயே பிரதியமைச்சராக கடமையாற்றியதாகவும் நடைமுறையிலுள்ள ஆட்சியை மாற்றியமைக்க மக்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அருந்திக பெர்ணான்டோ, பிரதியமைச்சர் பதவியிலிருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (12) பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

“என்னை, மக்களே தெரிவு செய்தனர். நான் அமைச்சுப் பதவியை வகிப்பதில் மக்களின் எதிர்ப்பு காணப்பட்டது. இந்த அரசாங்கம் உரிய முறையில் செயற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டே அதற்குக் காரணமாகும். இப்போது பதவியில் இல்லை. நான் மக்களுடன் இணைந்து அரசாங்கத்தை மாற்றுவதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன்.

இந்த ஆட்சியின் தவறான பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)