தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்ப்பட்டுள்ளது,
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 975 பேர் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 370 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலேயே ஆயிரத்து 98 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 27 ஆயிரத்து 53 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 8928 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 685 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5536 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 4553 பேரும், திருகோணமலையில் 4594 பேரும், இரத்தினபுரியில் 9817 பேரும் அதிகளவில் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மக்களும் தங்களது சுற்றுப்புறச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதுடன் மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ச்சியான காய்ச்சல் அல்லது டெங்கு நோய் தொடர்பிலான அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுககொள்ளுமாறும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.