பொருளாதார தடைகள் அனைத்தும் அணு ஆயுத சோதனைகளை அதிகரிக்கும் வடகொரியா எச்சரிக்கை…

ஐ .நா சபை விதிக்கும் பொருளாதார தடைகள் அனைத்தும் தங்களது அணு ஆயுத சோதனைகளை அதிகரிக்கும் என வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு எதிராக கடும் பொருளாதார தடைகள் அடங்கிய தீர்மானத்தை நிறைவேற்றியது.

ஆனால், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில நாட்களில் புதிய ஏவுகணை சோதனை ஒன்றை வடகொரியா மேற்கொண்டு ஜப்பான் தீவுகளுக்கு மேலாக இந்த ஏவுகணை பறந்ததாகவும் செய்திகள் வெளியானது.

இதற்கிடையே, வடகொரியா உடனான பிரச்சனைக்கு போர் தான் தீர்வு என்றால் அதையும் மேற்கொள்வோம் என அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வடகொரிய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை ஒன்று அந்நாட்டு அரசு ஊடகத்தில் வெளியானது. அதில், “வடகொரிய அரசு மீது பொருளாதார தடைகள் மற்றும் அழுத்தங்களை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் கொடுப்பதால், அணுசக்தி அணுகு முறையின் இறுதிமுடிவு வேகமாக அதிகரிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐ.நா சபை கூட்டத்தில் வடகொரிய பிரதிநிதி இந்த வார இறுதியில் உரையாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.