ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.125¼ கோடி வழங்க இறுதி ஒப்புதல்..

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.125¼ கோடி வழங்க இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக நிதித்துறை செயலாளர் உயர் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தார்.

குறித்த வழக்கு நேற்று(18) நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக நிதித்துறை(செலவின பிரிவு) செயலாளர் எம்.ஏ.சித்திக்கின் அறிக்கையை தாக்கல் செய்தனர்.

அதில் கூறி இருப்பதாவது:-

2004-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி நிதித்துறை (ஓய்வூதியம்) பிறப்பித்த உத்தரவுப்படி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மாதாந்த ஊதியத்தில் 10% பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. அதே தொகை அரசின் பங்களிப்பாக பொதுக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொருவருக்கும் ஓய்வூதிய கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பது தொடர்பான ரசீது வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரம் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் வரை வட்டியுடன் சேர்த்து, 18 ஆயிரத்து 16 கோடி ரூபாய் பொதுக் கணக்கில் இருப்பு உள்ளது. பணி ஓய்வு பெற்றவர்களுக்கும், பணியின் போது இறந்து போனவர்களுக்கும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கும் சேர வேண்டிய ஓய்வூதிய தொகை உடனடியாக வழங்கப்படுகிறது.

கருவூல கணக்குத்துறை ஆணையர் அறிக்கைபடி கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதி வரை ஓய்வூதிய கணக்கை முடிக்க கேட்டு 7 ஆயிரத்து 409 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 3 ஆயிரத்து 288 ஊழியர்களுக்கு 125 கோடியே 24 லட்சத்து 24 ஆயிரத்து 317 ரூபாய் வழங்க இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை படித்து பார்த்த நீதிபதி, விசாரணையை வருகிற 22ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

 

(rizmira)