மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டமானது இன்று(20) 8வது நாளாகவும் தொடர்கிறது.
இன்று(20) மதியம் 12 மணிக்கு முன்னர் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தராவிட்டால் நாளை(21) மதியம், மின்சாரத்துறை அமைச்சை சுற்றி வளைக்க உள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றிய கூட்டமைப்பின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தற்போது வழமையான முறையில் இடம்பெறுவதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள குறித்த அந்த அமைச்சு, எந்தவொரு காரணத்திற்காகவும் மின்சார பாவனையாளர்களுக்கு பிரச்சினை ஏற்படுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியாக சில இடங்களில் சிறியளவு மின்சாரம் தடை ஏற்படுகின்ற போது அதனை வழமைக்கு கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் புத்தளம், ஹப்புத்தளை உள்ளிட்ட பல இடங்களில் மின்சார விநியோகத் தடை நிலவுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
(rizmira)