உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இவ்வருட இறுதியில் அல்லது ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் என்ற உறுதிமொழியின் அடிப்படையிலேயே மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க முடியுமென பாராளுமன்றத்தில் ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரா குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்த) சட்டமூலம் மீதான விவாதம் நேற்று(20) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவுமான அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான சகல தடைகளும் ஒக்டாபர் மாதத்துக்குள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். அவ்வாறு நிவர்த்தி செய்யப்பட்டாலே எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்த முடியும் என அவர் கூறினார்.
மேலும், புதிய தேர்தல் முறையொன்றை தயாரிப்பது காலத்தின் தேவையாகும். மாகாண சபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கு எல்லை நிர்ணயம் என்ற விடயம் காரணமாக சொல்லப்பட்டது. இதனால் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் பிற்போடப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இவ்வாறான சூழ்நிலையிலேயே மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய செயற்பாடுகள் 6 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனடிப்படையில் செயற்பட்டால் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் பதவிக் காலம் முடிந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த முடியும்.
அதேநேரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள போதும், தேர்தல்களை நடத்துவதற்கான மாநகர சபைகள், பிரதேச சபைகளுக்கான கட்டளைச் சட்டங்கள் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு, அவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
(rizmira)