முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரண குணவர்த்னவை, எதிர்வரும் 26ஆம் திகதி, நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல, நேற்று(21) கட்டளையிட்டார்.
தேசிய லொத்தர் சபையின் தலைவராக சரண குணவர்த்ன இருந்த காலப்பகுதியில், குறித்த சபைக்கு வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி, அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தினார் என்ற, குற்றச்சாட்டில், இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ், ஒன்பது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால், 2016ஆம் ஆண்டு, தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகள், கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் நேற்று(21) எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சரண குணவர்தன மன்றில் ஆஜராகியிருக்கவில்லை.
அவர், வேறொரு வழக்குக்காக, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என, நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிலையிலே, நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.
(rizmira)