மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, எதிர்வரும் 13 ஆம் திகதியுடன் சாட்சிப் பதிவுகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக குறித்த விசாரணை ஆணைக்குழுவுக்கு தலைமை தாங்கும் நீதியரசர் கே.டி. சித்ரசிறி தெரிவித்துள்ளார்.
குறித்த ஆணைக்குழு முன்னிலையில் முக்கியமான பல சாட்சியங்கள் உள்ளிட்ட பல சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சாட்சிப் பதிவுகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.
இந் நிலையில் தற்போது முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனிடம் ஆணைக்குழு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந் நிலையிலேயே அடுத்து வரும் ஒரு வாரத்துக்குள் சாட்சிப் பதிவுகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் சித்ரசிறி தெரிவித்துள்ளார்.
சாட்சிப் பதிவுகள் நிறைவுற்ற பின்னர், ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை தயார் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அதற்கான கால அவகாசம் தமக்கு தேவைப்படும் எனவும் இதன்போது அவர் மேலும் சுட்டிக்கடியுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டி.சித்ரசிறியின் தலைமையில் நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் குறித்த இந்த விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)