இம்முறை தேர்தலில் ஐ.தே.கட்சி அன்னப் பறவை சின்னத்தில்?

ஐக்கிய தேசியக் கட்சி அன்னப் பறவை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருகின்றது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் வேறு சில அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களை இணைத்து அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இதற்கான ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மிக முக்கியமான கூட்டமொன்று எதிர்வரும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ளது.

மேலும், தமிழ் – முஸ்லிம் கட்சிகளை இணைத்துக் கொண்டு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி மைத்திரபாலவிற்கு ஆதரவளித்த தரப்புக்களை மீள ஒன்றிணைக்க முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், இதுவரையில் அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் வியூகத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த கட்ட முன்நகர்வை மேற்கொள்ளும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அன்னப்பறவை சின்னத்தில் கட்சிகளை ஒன்றிணைத்து அதற்கு தலைமை தாங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் விருப்பம் வெளியிட்டுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

(riz)