கோதுமை மா இறக்குமதியை அரசு கட்டுப்படுத்த மாட்டாது…

கோதுமை மா இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கம் எதுவும் அரசுக்கு இல்லையென கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கோதுமை மா 01Kg இற்கான  செஸ் வரி  15 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்காக கனக ஹேரத் எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் தலா நுகர்வை கணிப்பீடு செய்வதற்கான ஆய்வு 3 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் தலா கோதுமை நுகர்வு 564.4 கிலோவாக காணப்பட்டது. 2001ஆம் ஆண்டிலும் இவ்வாறானதொரு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதன் முடிவு இதுவரை வெளியிடப்படவில்லையென அமைச்சர் பாராளுமன்றத்துக்கு வழங்கிய பதிலில் தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டில் நிலவுகின்ற வறட்சி காரணமாக அரிசித் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக கோதுமை மா இறக்குமதியை அரசு அனுமதித்துள்ளது.

எனவே கோதுமைமாவை மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குவதற்காக ஒரு கிலோ கோதுமைமாவிற்கான செஸ்வரி 15 ரூபாவாக குறைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்