சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றம் நேற்று(18) சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினார்.
‘சுகாதார அமைச்சருக்கு எதிராக எமது அணியின் கையெழுத்துக்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்கும் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அது எப்போது விவாதிக்கப்படும்’ என்று கேள்வி எழுப்பினார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கட்சித் தலை வர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குண வர்தன கேள்வி எழுப்பியதற்கு, இந்த விடயம் தொடர்பில் வழக்கு இருக்கின்றது. உரிய வகையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று இதற்குச் சபாநாயகர் பதிலளித்தார்.
குறுக்கிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, “..நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டதன் பின்னர், நிலையியற் கட்டளை மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனை உள்ளிட்ட விடயங்களுக்கு அமைவாக தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே அது நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்படவேண்டும்.
ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டதன் பின்னர் விவாதத் துக்கு எடுக்க முடியாது என்று கூறுவதில் எந்தத் தர்க்கமும் கிடையாது. வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதமும் நவம்பர் 9ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாவிட்டால் ஜனவரி மாதம் வரை காலதாமதம் ஏற்படும். இது தொடர்பில் விரைந்து முடிவொன்றை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், சபாநாயகர் இந்த சபைக்குரிய பொறுப்பைத் தவறவிட்டதாகிவிடும்’ என்றும் அநுரகுமார சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.
(rizmira)