கொலாம்பியாவில் நேற்று ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 18 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் அமெரிக்கா நாடான கொலாம்பியாவில் உள்ள கவ்கா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக அப்பகுதியில் உள்ள நதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், கொர்னிடோ நகரில் பொதுமக்கள் வசிப்பிடங்களில் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 4 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை சுற்றி வசித்துவந்த 3000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்ட அந்நாட்டு அதிபர் ஜுவான் மனுவல் சாண்டாஸ், இந்த சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவருக்கும் அரசு தரப்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என கூறியுள்ளார்.