சீனாவில் நிலவிவரும் கடும் பனிமூட்டம் காரணமாக நேற்று(15) தேசிய நெடுஞ்சாலையில் 30 வாகனங்கள் ஒன்றோடொன்று வரிசையாக மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹுயி மாகாணத்தில் தற்போது பனிப்பொழிவும், பனிமூட்டமும் கடுமையாக உள்ள நிலையில் இங்குள்ள ஃபுயாங் நகரில் உள்ள தேசிய விரைவு நெடுஞ்சாலை நேற்று(15) பனிப்படலத்தால் மூடப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பனிமூட்டத்துக்கு இடையில் அவ்வழியாக சென்ற சுமார் 30 வாகனங்கள் ஒன்றோடொன்று வரிசையாக மோதிக்கொண்ட விபத்தில் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன. இவ்விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் 19 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.