இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.
கல்கத்தாவில் இடம்பெறும் குறித்த இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய, முதலில் துடுப்டிபெடுத்தாடிய இந்திய அணி, 11.5 ஓவர்கள் பந்து வீசப்பட்டிருந்த நிலையில், மூன்று விக்கட்டுக்களை இழந்து 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதன்போது போதிய வெள்ளிச்சமின்மை காரணமாக பிற்பகல் 3.40 அளவில் முதலாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லோகேஸ் ராகுல் முதலாவது பந்திலேயே ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் 8 ஓட்டங்களுடன், அணித் தலைவர் விராட் கோஹ்லி ஓட்டம் எதனையும் பெறாமலும் ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில், ஆறு ஓவர்கள் பந்து வீசிய சுரங்க லக்மால் ஓட்டம் எதனையும் வழங்காமல் இந்த மூன்று விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்.
முதலாம் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது, இந்திய அணி சார்பில், சதீஷ்வர் புஜாரா 8 ஓட்டங்களையும், அஜின்கியா ரஹானே ஓட்டம் எதனையும் பெறாதுள்ள நிலையில் களத்தில் இருந்தனர்.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று(17) இடம்பெறவுள்ளது.
####