பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் இன்று(20) காலை 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நியூ கலிடோனியா தீவில் டடைன் பகுதியில் இன்று(20) காலை சுமார் 7.0 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் சில நிமிடங்கள் நீடித்தது. டடைன் பகுதிக்கு 300 கிமீ தொலைவில் சுமார் 82 கிமீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதுடன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் தொடர்பான சேத விவரங்கள் அறிவிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நேற்று மாலை இதே பகுதியில் 6.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.