பரீட்சை நேரத்தில் விமானங்கள் பறக்கத் தடை…

தென் கொரியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் சிசாட் (CSAT) பரீட்சை நாளில் தென் கொரியா முழுவதும் ஸ்தம்பிதமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயண நேரம் தாமதமாகும், பங்கு சந்தைகள் தாமதமாக திறக்கப்படும் மற்றும் விமானங்கள் தரையிறங்கவோ, புறப்படவோ தடை செய்யப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இவ்வருடம் நவம்பர் 16 ஆம் திகதி இந்த பரீட்சை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்நாட்டின் தென் கிழக்கு கடற்கரை பகுதியிலும், போஹாங் நகரத்திலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து சிசாட் பரீட்சை தள்ளிவைக்கப்பட்டது. இயற்கை பேரிடரால் பரீட்சை நாள்   மாற்றியமைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நியாயமாக இந்த பரீட்சையை நடத்த வேண்டும் என்பது குறித்து யோசித்த அந்நாட்டின் கல்வி அமைச்சகம், இந்த முடிவை எடுத்துள்ளது.

இதேவேளை, பரீட்சை நாளன்று மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தேர்வாளர்களுக்கு போக்குவரத்து தேவை அதிகமுள்ளதால், எப்போதும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் தென் கொரிய வங்கிகள் கூட்டமைப்பு, அன்றைய தினத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் கல்வி அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று, பல தனியார் நிறுவனங்களும் தங்கள் வேலை நேரத்தை மாற்றியமைத்தனர் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.