மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில தோட்டத்தில் பாக்றோ பிரிவில் காணாமல் போயிருந்த இருவரின் சடலங்களும் கடற்படை சுழியோடிகளின் உதவியை கொண்டு இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு கணேமுல்ல பகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணிபுரிந்த மேற்படி அண்ணன், தங்கை இருவரும் இவர்களின் தங்கையின் பூப்புனித நீராட்டு விழாவிற்காக கடந்த 23 ஆம் திகதி பாக்றோ தோட்டத்திற்கு கெப் ரக வாகனம் ஒன்றில் வருகை தந்துள்ளனர்.
கடந்த 25.11.2017 அன்று குறித்த விழா நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக வருகை தந்த இவர்கள் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் 27 ஆம் திகதி உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமல்போனவர்களின் கையடக்கத் தொலைபேசி ஒன்று காணாமல்போனது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துவிட்டு வருவதாக கூறிச் சென்ற இவர்கள் காணாமல் போயிருப்பதாக பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் பயணம் செய்த கெப் ரக வாகனம் கவரவில சிங்கள பாடசாலை ஒன்றிற்கு அருகில் ஆட்களற்றுக் காணப்படுவதாக பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் சிலரால் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உறவினர்கள் மஸ்கெலியா பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். மஸ்கெலியா பொலிஸார் இன்று(28) காலை ஸ்தலத்திற்கு விரைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு மோப்ப நாயையும் ஈடுபடுத்தினர்.
அதேவேளை மேற்படி யுவதி மற்றும் இளைஞனின் காலணி, கைக்குட்டை, ஆடைகள் ஆகியன ஆற்றப்பகுதியிலும், கெப் ரக வாகனத்திலும் காணப்படுவதை பொலிஸார் கண்டறிந்தனர்.
இதனையடுத்து மஸ்கெலியா பொலிஸார் கொழும்பில் உள்ள கடற்படை சுழியோடிகளின் உதவியை நாடியிருந்தனர்.
இந்த நிலையில் சுழியோடிகள் இன்று மதியம் 1.30 மணியளவில் வருகை தந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்ட சில நிமிடங்களில் சடலங்கள் இரண்டையும் மீட்டனர்.
குறித்த சடலங்கள் தொடர்பில் ஹட்டன் நீதிவான் விசாரணைகளை மேற்கொண்ட பின் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குகொண்டு செல்லப்படவுள்ளதாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.