2018 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை…

ரஷ்ய விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தி பதக்கம் வென்றது பலமுறை நிரூபிக்கப்பட்டதால், 2018 ஆம் ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு சூச்சி நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டு அவர்களின் பதக்கங்கள் பறிக்கப்பட்டதனையடுத்து, அடுத்த வருடம் தென் கொரியாவில் நடக்க இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அந்த அணிக்கு தடை விதிக்க வேண்டும் என பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில், இது தொடர்பான முடிவெடுக்க சுவிஸ்லாந்தின் லாசன்னே நகரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் நடைபெற்றது. அந்நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் வீரர், வீராங்கணைகள் ஊக்கமருத்து பயன்படுத்தியது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரஷ்ய வீரர்கள் தனிப்பட்ட முறையில் ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் கடும் சோதனைக்கு பின்னரே விளையாட்டுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.