சிறுநீரக நோயாளர்களின் நலன்கருதி நிர்மாணிக்கப்படவுள்ள பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(06) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
சீன அரசாங்கத்தின் 120 கோடி ரூபாய் நிதி உதவியுடன் அமைக்கப்படவுள்ள இந்த சிறுநீரக நோயாளிகளுக்கான வைத்தியசாலை தெற்காசியாவில் நிர்மாணிக்கப்படும் மிகப் பெரிய வைத்தியசாலை என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையில் சகல வசதிகளும் கொண்ட 200 கட்டில்கள் நோயாளர்களுக்காக அமைக்கப்படவுள்ளதுடன் வெளிநோயாளர் சேவை பிரிவும் இதில் அமையவிருக்கிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , சிறுநீரக நோயாளிகளுக்கு இரத்த மாற்று வசதி வழங்கும் 100 கட்டில்கள் அமைக்கப்படவுள்ளன. இதன் நிர்மாணப் பணிகளுக்கு ஆயிரத்து 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறுநீரக நோயாளர்களுக்கான சத்திர சிகிச்சைகள் உள்ளிட்ட சகல சேவைகளையும் இந்த வைத்தியசாலையில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.