பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கை மீண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் 22ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில், மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவரும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று(14) மீண்டும் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
குறித்த மனுவில் கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி ஊடகங்களிடம் கருத்து வௌியிட்ட ரஞ்சன், இந்த நாட்டில் பெரும்பாலான சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என குறிப்பிட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கூறியமையானது, மக்களுக்கு சட்டம் தொடர்பில் இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், ரஞ்சனால் கூறப்பட்டதாக தெரிவிக்கப்படும் கூற்று குறித்த காணொளியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு முன்னதாக, தெரியப்படுத்தியிருந்த போதும், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை என, இன்று(14) பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இதனை கருத்தில் கொண்ட நீதிமன்றம், ரஞ்சனின் கருத்து அடங்கிய குறித்த காணொளியை ஔிபரப்பிய ஊடகத்திற்கு, அதனை ஜனவரி 15ம் திகதிக்கு முன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறபித்துள்ளது.