இளமைத் தோற்றத்தில் கலக்கும் அஜித்…

அஜித்குமார் நடிக்கும் புதிய படத்துக்கு ‘விசுவாசம்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை சிவா இயக்குகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வேதாளம், வீரம், விவேகம் ஆகிய 3 படங்கள் தொடர்ச்சியாக வந்தன.

மீண்டும் நான்காவது தடவையாக விசுவாசம் படத்தில் இருவரும் இணைந்துள்ளார்கள். சமீபத்திய படங்கள் அனைத்திலும் அஜித்குமார் லேசாக நரைத்த தாடி வைத்து ‘சால்ட் அண்ட் பெப்பர்’ தோற்றத்தில் வந்தார். விசுவாசம் படத்தில் இளமையாக வருகிறார்.

உடற்பயிற்சிகள் செய்து எடையையும் குறைத்து இருக்கிறார். விசுவாசம் படத்தில் அஜித்குமார் நடிக்கும் இளமை தோற்றம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வேதாளம், வீரம் படங்களில் தாதாவாகவும் விவேகம் படத்தில் புலன் விசாரணை அதிகாரியாகவும் அஜித்குமார் நடித்து இருந்தார். ‘விசுவாசம்’ படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த படத்தில் வட சென்னை தாதா கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வட சென்னை பகுதியில் நடக்கும் ரவுடிகள் மோதலை மையப்படுத்தி திரைக்கதை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. 90 சதவீதம் படப்பிடிப்பு சென்னையிலேயே நடக்கிறது. அடுத்த மாதம் 19 ஆம் திகதி படப்பிடிப்பை ஆரம்பமாகி தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் பரிசீலிக்கப்பட்டார். தற்போது அனுஷ்காவை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘என்னை அறிந்தால்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.