கொழும்பு மாநகர சபைத் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி மனுத்தாக்கல்…

கொழும்பு மாநகர சபைத் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சியினால் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபைத் தேர்தலுக்காக தாம் தாக்கல் செய்த வேட்பு மனுப் பட்டியல் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, அக் கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி ஶ்ரீநாத் பெரேரா உள்ளிட்ட மூவர் இதனை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், இந்த மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட குழுவினர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன், தமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என கூறியுள்ள மனுதாரர்கள், குறித்த வேட்பு மனுவை மீள பொறுப்பேற்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிடுமாறும் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

மேலும், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை, கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

####