சீன செய்மதியொன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்வரும் மார்ச் மாதம் பூமியின் மீது மோதக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் இதன்போது அதிலுள்ள அதி நச்சுத்தன்மை வாய்ந்த கூறுகள் பூமியை வந்தடையும் அபாயம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
குறித்த செய்மதியிலுள்ள ஏவுகணை எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் ஹைட்ராஸின் என்ற இரசாயனமே இவ்வாறு பூமியை வந்தடையும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்த இரசாயனமானது மனிதர்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அபாயம் மிக்கதாகும்.
இந்நிலையில் மேற்படி நச்சு இரசாயனத்தைக் கொண்டுள்ள Tiangong-1 என்ற மேற்படி செய்மதி செயலிழந்து பூமியை நோக்கி வேகமாகச் சுழன்று வந்து எதிர்வரும் மார்ச் மாதம் பூமியின் மீது மோதவுள்ளதாக விஞ்ஞானி கள் கூறுகின்றனர்.
இந்த செய்மதி ஸ்பெயின், இத்தாலி, துருக்கி, இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாகங்களில் விழக்கூடிய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கும் விஞ்ஞானிகள் அந்த செய்மதி விழக்கூடிய வலயங்களை வர்ணத்தில் குறிப்பிட்டு காட்டும் உலக வரைபடமொன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த வரைபடத்தில் மேற்படி செய்மதியால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த செய்மதி விண்வெளிக்கு ஏவப்பட்டு சீனாவின் மிகப் பெரிய விண்வெளி நிலையமாக செயற்பட்டு வந்தது. அந்த செய்மதி இந்த ஜனவரி மாதத்துக்கும் எதிர்வரும் மாதத்துக்குமிடையில் செயலிழக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தற்போது அந்த செய்மதி பூமியிலிருந்து 300 கிலோமீற்றர் தூரத்தில் வலம் வந்து கொண்டி ருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

#riz