ஜயவர்தனபுர மருத்துவமனையின் தாதியர் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு…

கைவிரல் அடையாளத்தை பதிக்கும் நடைமுறை அமுலாக்கப்பட்டமைக்கு எதிராக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் தாதியர் பிரிவு ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று 9வது நாளாகவும் தொடர்கின்றது.

இதன்காரணமாக மருத்துவமனையின் நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் தாதியர் பிரிவு ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவிப்பதாக அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கத்தின் தலைவர் முரத்தொட்டுவே ஆனந்த தேரர், கொழும்பில் நேற்று10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டார்.

அதன்படி, கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் கண் மருத்துவமனைகளில் தமது சங்கத்தின் தாதியர்கள் இன்று முதல் சுகவீன விடுமுறையில் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஈ – ஹெல்த் எனப்படும் சகல மருத்துவமனைகளையும் கணணி மயப்படுத்தும் திட்டத்திற்கு எதிராகவே ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் தாதியர் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.