இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 இன்று(12) பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு என பல்வேறு விதமான செயற்கைக் கோள்களை உருவாக்கி விண்ணில் செலுத்தி வருகிறது.
தொலைதூர உணர்திறன் செயற்கைக்கோள் ‘கார்ட்டோசாட்-2’ உள்பட 31 செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் மூலம் ஜனவரி முதல் வாரத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவெடுத்து, அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
இதற்கான பணிகள் நிறைவடைந்ததையடுத்து, சரியாக இன்று காலை 9:28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 31 செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-40 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இன்று செலுத்தப்பட்ட கார்ட்டோசாட்-2 இஸ்ரோவின் 100-வது செயற்கைக்கோள் ஆகும்.
கண்காணிப்பு செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2, பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்து குறித்த தகவல் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.