இந்த வருடம் முதல் வீதி ஓவியக் கலைஞர்களுக்கு ஜனாதிபதி விருது…

சிறந்த படைப்பாற்றல் மிக்க வீதி ஓவிய கலைஞர்களின் திறமையைப் பாராட்டும் வகையில் இந்த வருடம் முதல் இத்துறைச்சார்ந்த கலைஞர்களுக்காக ஜனாதிபதி விருது வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு வீதி ஓவியக் கலைஞர்கள் சங்கத்துடன் நேற்று(16) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேபோல், வீதி ஓவியக் கலைஞர்களின் நலனுக்காகவும் அவர்களின் எதிர்கால நடவடிக்கைகளுக்காகவும் அனைத்து ஆதரவுகளையும் வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையின் கீழ் தமது துறைக்கு தற்போது சரியான வரவேற்புக் கிடைத்திருப்பதாக அந்த ஓவியக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது தேசிய நல்லிணக்க செயற்பாட்டுடன் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கை இணைக்கும் நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு தமது படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வல்லமை குறித்தும் சுட்டிக்காட்டிய இவர்கள் சில கோரிக்கைகளையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

அதேபோல், நீண்டகாலம் இந்தத் துறையில் ஈடுபடுவோருக்கு கடன் வசதியை செய்து தருமாறும் இவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.