பிரதான நான்கு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத பணியாளர்கள் நேற்று(23) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாக இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்திருந்தார்.
ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றும் புகையிரத இயந்திர சாரதிகளின் சேவை காலம் நீடிக்கப்படாமை மற்றும் புதிய ரயில் இயந்திர சாரதிகள் இணைத்து கொள்ளப்படாமை உள்ளிட்ட பிரதான 4 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் வேலைநிறுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தப் வேலை நிறுத்தம் காரணமாக, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இன்று(24) அதிகாலை ஆரம்பமாகவிருந்த யாழ் தேவி, தலைமன்னார் மற்றும் மட்டக்களப்பு நோக்கி செல்லவிருந்த ரயில்கள் உள்ளிட்ட 10 புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.