நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, இனி பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாகி காதல் காட்சிகளில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
நயன்தாரா, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் கலெக்டராக நடித்து சமீபத்தில் வெளியான ‘அறம்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்தது. நயன்தாராவின் நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்தது. இந்த படத்தில் கதாநாயகன் இல்லை. இனிமேல் பெரிய கதாநாயகர்கள் ஜோடியாகி காதல் காட்சிகளில் நடிப்பது இல்லை என்று நயன்தாரா முடிவு எடுத்து இருக்கிறார்.
தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளாக தேடுகிறார். ‘ஈரம்,’ ‘குற்றம் 23’ படங்களை இயக்கி பிரபலமான அறிவழகன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையொன்றை நயன்தாராவுக்கு சொல்லி இருக்கிறார். அது அவருக்கு பிடித்து இருக்கிறது. எனவே அந்த படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
படப்பிடிப்புக்கான வேலைகள் ஆரமபித்துள்ளதாகவும் விரைவில் அறிவழகன் படத்தில் நயன்தாரா நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. நயன்தாரா கைவசம் உள்ள இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா ஆகிய படங்களும் அவரது கதாபாத்திரத்துக்கு முக்கியம் அளிக்கும் கதையம்சம் கொண்டவை.
நயன்தாரா தமிழ் பட உலகில் நம்பர்-1 கதாநாயகி இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்.